Press "Enter" to skip to content

மாநிலங்களுக்கு 3 கோடி முக கவசங்கள் – மத்திய அரசு வினியோகம்

மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 கோடிக்கும் மேற்பட்ட என்-95 முக கவசங்களையும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும் வினியோகித்து இருக்கிறது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று மோசமாக பாதித்துள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்த வைரசின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.

தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், அதன் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் முக்கிய பங்களிப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சை வசதிகளை அதிகரிப்பதுடன், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அதற்கான மருத்துவ பொருட்களையும், சாதனங்களையும் மத்திய அரசு இலவசமாக அளித்து வருகிறது.

அந்த வகையில் 3.04 கோடி என்-95 முக கவசங்களையும், 1.28 கோடி சுய பாதுகாப்பு கவச உடைகள், கருவிகளையும், 10.83 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வினியோகித்துள்ளது.

இவை தவிர்த்து 22 ஆயிரத்து 533 வெண்டிலேட்டர்களையும் உள்நாட்டில் தயாரித்து வழங்கி உள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சம் நேற்று கூறும்போது, “இந்திய அரசால் வழங்கப்பட்ட பெரும்பாலான தயாரிப்புகள், ஆரம்பத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை. வளர்ந்து வரும் உலகளாவிலான தொற்றின் காரணமாக அவை அன்னிய சந்தைகளில் கிடைப்பதுவும் இல்லை. சுகாதார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், மருந்து அமைச்சகம், தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை அமைச்சகம், ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு மற்றும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து முயற்சித்து, உள்நாட்டு தொழில் ஊக்குவிக்கப்பட்டு உற்பத்தி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தது. அதன் காரணமாக என்-95 முக கவசங்கள், சுய பாதுகாப்பு கவச உடைகள், கருவிகள், வெண்டிலேட்டர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும், “உள்நாட்டில் தயாரிப்போம் திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வினியோகிக்கும் பெரும்பாலான மருத்துவ பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்” எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »