Press "Enter" to skip to content

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

நடிகர் சூர்யாவின் அறிக்கையை கொண்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையிலும் மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று விடாப்பிடியாக இருந்தது. அதன்காரணமாக நேற்று நீட் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். அத்துடன் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என 6 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ‘‘நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை. 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை’’ எனத் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »