Press "Enter" to skip to content

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் – இந்திய ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என்று ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜம்மு:

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் தொடர் அத்துமீறல்களாலும், இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளாலும் பதற்றமான சூழல் உள்ளது. அங்கு இரு தரப்பு படைகளும், தளவாடங்களும் குவிக்கப்பட்டு போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இதற்கு மத்தியில் சீன அரசின் அதிகாரபூர்வ நாளேடான ‘குளோபல் டைம்ஸ்’, “லடாக்கில் இந்தியாவின் செயல்பாட்டு தளவாடங்கள் போதுமான அளவில் தயாரிக்கப்படவில்லை. குளிர்காலத்தில் திறம்பட செயல்பட முடியாது” என்று குறைத்து மதிப்பிட்டு கூறி உள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் வடக்கு பிராந்திய ராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஜம்முவில் நேற்று கூறியதாவது:-

இந்தியா அமைதியை நேசிக்கிற ஒரு நாடு. அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. இந்தியா எப்போதும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது.

லடாக்கில் உயரமானது முதல் மிக உயரமானது வரையிலான மலைகள் உள்ளன. அங்கு நவம்பருக்கு பின்னர் 40 அடி வரை கடும் பனிப்பொழிவு இருக்கும்.

இத்துடன் வெப்ப நிலையும் மைனஸ் 30-40 டிகிரி அளவுக்கு குறையும், இது வழக்கமான நிகழ்வு.

காற்றின் குளிர்ச்சியான காரணி, துருப்புகளுக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும். பனிப்பொழிவால் சாலைகளும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இவை அனைத்தையும் மீறி இந்திய படைகளுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பது என்னவென்றால், இந்திய வீரர்கள் குளிர்கால போரின் பெரும் அனுபவத்தை கொண்டுள்ளனர் என்பதுதான். அவர்கள், குறுகிய அறிவிப்பில் செயல்பட உளவியல் ரீதியில் தயார் செய்யப்பட்டுள்ளனர். இந்த உண்மைகள் எல்லாம் உலகத்துக்கு தெரியும்.

தளவாட திறன் இயக்கம், வாழ்விடம் மற்றும் ஆரோக்கியத்துக்கான தரமான சேவைகள், சிறப்பு ரேஷன்கள், பழுது மற்றும் மீட்பு, வெப்ப அமைப்புகள், உயர் தர ஆயுதங்கள், வெடி மருந்துகள், தரமான ஆடைகள் மற்றும் பலவற்றுடன் தொடர்புடையவை.

வீரர்களை வெறுமனே ஈடுபடுத்தவும், செயல்பட செய்யவும் முடியும் என்றாலும், இந்த ஆண்டு மே முதல் சீனா ஆக்கிரமிப்புக்கான முதல் அறிகுறிகளை காட்டியபோதே நிறைய ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மிக உயரமான சியாச்சின் போர்க்கள அனுபவம், நமது ராணுவத்துக்கு இருக்கிறது.

நம்மிடம் நிறைய விமானப்படை தளங்கள் உள்ளன. அவற்றின் உதவியுடன் ராணுவத்தை நன்கு பராமரிக்க முடியும். பனியை அகற்றும் நவீன தளவாடங்கள் உள்ளன. டாங்கிகளுக்கான சிறப்பு எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் கவச வாகனங்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சீனா எப்போதுமே போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால், அவர்கள் சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்ட, முழுமையாக ஓய்வு எடுக்கப்பட்ட, உளவியல்ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள். இந்த கவலைகள், சீன துருப்புகளின் மனதில் ஊடுருவி வருகின்றன. இதெல்லாம் சீன ஊடகங்களில் காணப்படுகின்றன.

கிழக்கு லடாக்கில் சீனாவுக்கு எதிராக முழு அளவிலான போருக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது.

உடல் மற்றும் உளவியல் ரீதியாக போரிடும் இந்திய வீரர்களுடன் ஒப்பிடும்போது, சீன துருப்புகள் பெரும்பாலும் நகர்ப்புறங்களை சேர்ந்தவர்கள். கள நிலைமைகளின் கஷ்டங்களை, நீண்ட கால பயன்படுத்தல் அனுபவங்களை பெறாதவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »