Press "Enter" to skip to content

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பூஜை நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்களை எப்போது அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக கேரள அரசு வருகிற 28-ந் தேதி ஆலோசனை நடத்துகிறது.

சபரிமலை :

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கோவில் ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. மற்ற பூஜைகள் நடைபெறவில்லை.

மறுநாள் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் தினசரி பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 5 நாட்கள் பூஜைக்கு பிறகு புரட்டாசி மாத பூஜைகள் இன்று நிறைவு பெறுகிறது. இதனையொட்டி கோவில் நடை இன்று இரவு 7.30 மணிக்கு சாத்தப்படுகிறது. புரட்டாசி மாத பூஜையிலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

17 -ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த சமயத்தில், முன்பதிவு செய்து வரும் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது. அதே சமயத்தில், தேவசம்போர்டு தங்களுடைய கருத்தை அறிக்கையாக தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசு இறுதி முடிவு எடுக்கும். மண்டல பூஜைக்கு முன்பாக ஐப்பசி மாதத்தில் பக்தர்களை அனுமதித்து முன்னோட்டம் காணலாமா? என வருகிற 28-ந் தேதி அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »