Press "Enter" to skip to content

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் – வெள்ளைமாளிகை வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்

கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து தற்போது வெள்ளைமாளிகை வந்தடைந்தார்.

வாஷிங்டன்:

உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய  இருவருக்குமே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.

காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3-ம் தேதி மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டப்பின் அவர் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து வந்தார். இதையடுத்து, அவரது உடல்நிலை சீரடைந்தது. 

இந்நிலையில், 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் இருந்து டொனால்டு டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதையடுத்து, அவர் வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தனி உலங்கூர்தி மூலம் இன்று வெள்ளைமாளிகை வந்தடைந்தார். 

வெள்ளைமாளிகையின் மேல் தளத்திற்கு சென்ற டிரம்ப் அங்கு நின்றவாறு தனது முகக்கவசத்தை கழற்றிய ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ’சல்யூட்’ செய்தார். 

முன்னதாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன்! பொய்யான செய்திகள் நிறுவனங்கள் பொய்யான தேர்தல் முடிவுகளை மட்டுமே வெளியிடுகின்றன’ என்றார்.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »