Press "Enter" to skip to content

இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் தமிழகம் ஒன்றாக திகழ்கிறது – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

எங்களுடைய உறுதியான முயற்சியால் இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டுள்ளார்.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதை தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, பல்வேறு துறைகளிலும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலுக்கு மத்தியில் மாநிலங்கள் வாரியாக புதிய திட்டங்களுக்கான முதலீடுகள் எந்த வகையில் இருக்கிறது? என்பதை ‘பிராஜக்ட் டுடே’ நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களை உள்ளடக்கிய நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் மாநிலங்கள் வாரியாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பது குறித்த புள்ளி விவரங்களை ‘பிராஜக்ட் டுடே’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 114 திட்டங்கள் மூலம் ரூ.35 ஆயிரத்து 771 கோடி முதலீடு ஈர்த்து சத்தீஷ்கார் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

132 திட்டங்கள் மூலம் ரூ.23 ஆயிரத்து 332 கோடி முதலீடுகளை ஈர்த்து தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சூரிய ஒளி மின்கலங்கள் மற்றும் தொகுப்புகள் திட்டத்துக்காக விக்ரம் சோலார் நிறுவனம் ரூ.5 ஆயிரத்து 423 கோடி முதலீடுகளை அறிவித்துள்ளது. 287 திட்டங்கள் மூலம் ரூ.19 ஆயிரத்து 959 கோடி முதலீடு ஈர்த்து கர்நாடக மாநிலம் 3-ம் இடத்தையும், 229 திட்டங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 532 கோடி முதலீடுகளை ஈர்த்து குஜராத் 4-ம் இடத்தையும், 182 திட்டங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 4 கோடி ஈர்த்து மராட்டியம் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

129 திட்டங்கள் மூலம் ரூ.13 ஆயிரத்து 461 கோடி ஈர்த்து உத்தரபிரதேசம் 6-வது இடத்தையும், 94 திட்டங்கள் மூலம் ரூ.12 ஆயிரத்து 991 கோடி முதலீடு ஈர்த்து ஆந்திரா 7-ம் இடத்தையும் பிடித்துள்ளது. நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் இந்திய அளவில் 2 ஆயிரத்து 219 புதிய திட்டங்களுக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 170 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் உள்ள இந்த நேரத்தில், பொருளாதார ரீதியாக முதலீடு செய்வதற்கு உகந்ததாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. இதன்மூலம் கொரோனாவால் சரிவை சந்தித்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உந்துகோலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பெருமிதம் தெரிவித்து, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வருவதற்கான எங்களுடைய உறுதியான முயற்சிகள் பலனை தருகின்றன. 2-ம் காலாண்டுக்கான முதலீட்டு எண்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுடைய முயற்சிகளை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தை, இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »