Press "Enter" to skip to content

காற்றாலையில் இருந்து குடிநீர் உற்பத்தி: பிரதமரின் யோசனை குறித்து ராகுல்காந்தி கிண்டல் – பா.ஜனதா பதிலடி

காற்றாலையில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யுமாறு பிரதமர் கூறிய யோசனையை ராகுல்காந்தி கிண்டல் செய்தார். அவருக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஒரு காற்றாலை நிறுவன தலைமை செயல் அதிகாரியுடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் காணொளியை வெளியிட்டார்.

அதில், காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி சுத்தமான குடிநீா, ஆக்சிஜன் ஆகியவற்றையும் உற்பத்தி செய்யுமாறு மோடி யோசனை தெரிவித்து இருந்தார்.

அதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்பது உண்மையான ஆபத்து இல்லை. ஆனால், அவரை சுற்றி இருப்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லும் துணிவு இல்லை என்பதுதான் ஆபத்தானது” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

அதையடுத்து, ராகுல்காந்திக்கு பா.ஜனதா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

ராகுல்காந்தி புரிதல் இல்லாதவர் என்பதை சொல்லும் துணிச்சல், அவரைச் சுற்றி இருக்கும் யாருக்கும் இல்லை. பிரதமரின் யோசனையை உலகின் முன்னணி காற்றாலை நிறுவன தலைமை செயல் அதிகாரியே ஆதரிக்கும்போது, ராகுல்காந்தி கேலி செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மெல்லிய காற்றில் இருந்து சுத்தமான குடிநீரை காற்றாலைகள் உற்பத்தி செய்வதாக வெளியான பத்திரிகை செய்தியை அவர் இணைத்துள்ளார்.

பா.ஜனதா சமூக வலைத்தள துறை தலைவர் அமித் மாளவியா, “அறியாமைக்கு வைத்தியமே கிடையாது. அறியா குழந்தை ராகுல், தன்னைப்போல் உலகத்தில் உள்ள எல்லோருமே அறியாமையில் இருப்பவர்கள் என்று நினைக்கிறார்” என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மெல்லிய காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கப்படுவதாக வெளியான 2 பத்திரிகை செய்திகளை வெளியிட்டுள்ளார். அவற்றை படிக்குமாறு கூறியதுடன், “இந்த சிக்கலான விஷயம், ராகுல்காந்திக்கு புரியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »