Press "Enter" to skip to content

ஊரடங்கு காலத்திலும் அயராத பணி- தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தபால் பட்டுவாடா தொய்வின்றி நடந்தது. இந்த அயராத பணிகளின்போது தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று முதன்மை தபால்துறை தலைவர் கூறினார்.

சென்னை:

உலக தபால் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்திய தபால்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய அஞ்சல் வாரமும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் உலக தபால் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 1866-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழமையான தபால் பெட்டி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் அஞ்சல் தலை சேகரிப்பு மையத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தது. இதனை தமிழக அஞ்சல்துறையின் முதன்மை தபால்துறை தலைவர் செல்வக்குமார் அர்ப்பணித்தார். அப்போது சென்னை நகரமண்டல தபால்துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன், தமிழ்நாடு வட்டத்தின் அஞ்சல் மற்றும் வணிகமேம்பாடு தபால்துறை தலைவர் ஜெ.சாருகேசி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த தபால் பெட்டி தற்போது அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் காட்சி பொருளாக நிறுவப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை தொடர்ந்து முதன்மை தபால்துறை தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கால் தபால்துறைக்கு வருவாய் இழப்பு இருக்கிறது. ஊரடங்கு காலத்தின் 6 மாதத்தில் 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் தபால் பட்டுவாடா தொய்வின்றி நடந்தது. இந்த அயராத பணிகளின் போது தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதுதவிர 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தபால்காரர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகள் மட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்களில் மத்திய-மாநில அரசுகளின் அனைத்துசேவைகளையும் பெறுவதற்கு ஏதுவாக பொதுசேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »