Press "Enter" to skip to content

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் வேகமாக அதிகரிப்பு- மாநகராட்சி தகவல்

சென்னையில் ஊரடங்கு தளர்வால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டது. அதில் ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்து கடந்த மாதம் 10-க்கும் குறைவான பகுதிகளுக்கே ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மேலும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து அதிகரித்ததோடு கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.

பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுமே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் தொற்று அதிகரிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, மாநகராட்சி அதிகாரிகள் வேகமாக ‘சீல்’வைத்து வருகின்றனர். தற்போது ஒரு தெருவில் 2 அல்லது 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகளால் அந்த தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த 6-ந்தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்களுக்கு மட்டுமே ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70-ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் ‘சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 தெருக்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்கள், கோடம்பாக் கம் மண்டலத்தில் 3 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்கள், வளசரவாக்கத்தில் ஒரு தெரு என மொத்தம் 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »