Press "Enter" to skip to content

அசாம் – மிசோரம் எல்லையில் பதற்றம் : இரு மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

அசாம்-மிசோரம் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை தணிப்பது குறித்து இரு மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி:

வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 155 கி.மீ. எல்லையை பகிர்ந்து வருகின்றன. இதில் சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும் இதில் எந்த வித பலனும் இதுவரை இல்லை.

இவ்வாறு எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மிசோரத்தை ஒட்டியுள்ள அசாம் மாவட்டமான சச்சாரின் லைலாபூரில் மிசோரம் அரசு அதிகாரிகள் கடந்த 16-ந் தேதி ஒரு கொரோனா பரிசோதனை மையத்தை அமைத்தனர். மிசோரம் எல்லையில் இருந்து 1½ கி.மீ.க்கு வெளியே, அதாவது அசாம் பகுதிக்குள் இந்த பரிசோதனை மையம் அமைக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அசாம் அரசின் அனுமதியின்றி ஒருதலைப்பட்சமாக இந்த மையத்தை அமைப்பதற்கு அசாம் அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. மிசோரம் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு லைலாபூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியது. மிசோரமை சேர்ந்த சிலர் அசாம் பகுதிக்குள் இருந்த வீடுகள், கடைகளுக்கு தீ வைத்தனர்.

மேலும் ஒருவரையொருவர் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இரு மாநில எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அங்கு பதற்றத்தை தணிக்க பெருமளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அத்துடன் மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்காவிடமும் பேசி வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று தொடர்பு கொண்டு பேசிய அவர், எல்லை மோதல் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இந்த நிலையில் எல்லை மோதல் தொடர்பாக அசாம் மற்றும் மிசோரம் மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லை நிலவரம் தொடர்பாக இரு மாநில தலைமை செயலாளர்களும், அஜய் பல்லாவிடம் விளக்கினர்.

குறிப்பாக, தற்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பதற்ற தணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் எடுத்து கூறினர். அப்போது இரு மாநில எல்லையில் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அஜய் பல்லா அறிவுறுத்தினார்.

அசாம்-மிசோரம் மாநில எல்லை மோதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »