Press "Enter" to skip to content

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை – பிலடெல்பியாவில் ஊரடங்கு அமல்

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்வத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிலடெல்பியா:

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் கடந்த 26-ம் தேதி (திங்கட்கிழமை) கருப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற காவல் துறை அதிகாரிகள் 2 பேர் அந்த வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி கத்தியை கீழே போடும்படி எச்சரித்தனர்.

ஆனால் அந்த வாலிபர் போலீசாரை நோக்கி முன்னேறி வந்ததால் அதிகாரிகள் 2 பேரும் அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விசாரணையில் காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கருப்பின வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது. உயிரிழந்த வால்டர் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதற்கிடையில், காவல் துறை அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் பிலடெல்பியா முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி காவல் துறையினருக்கு எதிராக போராடினர். 

இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் கார்களுக்கும் தீ வைத்தனர். பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டன. கடைகளில் இருந்த பொருட்கள் போராட்டக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. 

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள், காவல் துறை-போராட்டக்காரர்கள் இடையேயான மோதல் ஆகியவற்றால் பென்சில்வேனியா நகரமே வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் காவல் துறை அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நகரின் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக பிலடெல்பியா நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவும், போராட்டங்கள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிலடெல்பியா நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

இதற்கிடையில், கையில் கத்தியுடன் சுற்றிய வால்டர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளாகியுள்ளது. வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சியினருக்கும், ஜனநாயக கட்சியினருக்கும் இடையே இவ்விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »