Press "Enter" to skip to content

பீகார் சட்டசபை தேர்தல் – 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

பீகார் சட்டசபைக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

பாட்னா:

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ம் தேதி நடந்தது. 

இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர். பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர். திருநங்கையர் 980 பேர்.

41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்கள் ஆவர்.

மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், தராலி (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் உள்ளனர்.

ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் 2-ம் கட்ட தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

பீகாரில் 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 7-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ம் தேதி நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »