Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: இழுபறிக்கு என்ன காரணம்?

கொரோனா நோய் தொற்று டிரம்புக்கு எதிராக மக்களை திருப்பிய நிலையில், அதையே ‘சீன எதிர்ப்பு’ என்கிற ஆயுதத்தின் மூலம் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் டிரம்ப்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல், ஒரு தெளிவான நிலையை எட்டுவதற்கு சில நாட்கள் ஆகலாம். டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் இடையில் போட்டி, மிகக் கடுமையாகவே இருக்கிறது.

தேர்தலுக்கு சுமார் பத்து நாட்கள் முன்புகூட, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று பரவலாக சொல்லப்பட்டு வந்தது. கொரோனா நோய்த் தொற்று அபாயத்தை டொனால்டு டிரம்ப் மோசமாக கையாண்டார்; பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்; அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வேலையின்மை பூதாகாரமாக பெருகிவிட்டது. அமெரிக்க மக்களிடம், டிரம்புக்கு எதிராக கோபமான மனநிலை, வெளிப்படையாகவே தெரிந்தது. பிறகு எப்படி ‘கடுமையான போட்டி’யாக மாறியது?

அமெரிக்க வாக்காளர்கள் மத்தியிலும், நகரம் – கிராமம்; படித்தவர் – படிக்காதவர் பிரிவு ஆழமாக இருக்கிறது. இதில் நகரங்கள், படித்தவர்கள் ஆதரவு ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கு அமோகமாக இருந்தது. இதனை மாற்றுவதற்கு டொனால்டு டிரம்ப் சிறிதளவும் முயற்சிக்கவில்லை.

மாறாக, ‘உள் அமெரிக்க’ ,‘மண்ணின் மைந்தர்’களை குறிவைத்து பிரசார பாணியை கையாண்டார் டிரம்ப். கருப்பின அமெரிக்கர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஜோ பைடன் பக்கம் போவதை உணர்ந்தார். வெள்ளை அமெரிக்கர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைந்தார். உலகமே ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்த சம்பவம் பற்றி பேசுவதை தவிர்த்தார்.

டிரம்ப் எதிர்பார்த்ததை போலவே, அமெரிக்க தேர்தலில் கருப்பு- வெள்ளை பேதம், பெரிதாக வெளிப்பட்டதாக தோன்றுகிறது. அமெரிக்க சமுதாயம் இதில் இருந்து மீள்வதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம். நடந்து முடிந்த தேர்தலின் மிக மோசமான பின்விளைவாக இதை சொல்லலாம்.

கொரோனா நோய் தொற்று, டிரம்புக்கு எதிராக மக்களை திருப்பியது. அதையே ‘சீன எதிர்ப்பு’ என்கிற ஆயுதத்தின் மூலம், தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் டிரம்ப். அமெரிக்க மக்களின் மனங்களில் சீனாவுக்கு எதிரான கோபம் ஆழமாக படிந்துவிட்டது. சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும், அமெரிக்க வெள்ளையர், டிரம்பை ஆதரிப்பதில் முனைப்பு காட்டினார்கள். மொத்த மக்கள்தொகையில் இவர்கள், ஏறத்தாழ சரிபாதி இருக்கிறார்கள். இதனால் வந்ததுதான், இன்றுள்ள குழப்பம், இழுபறி எல்லாமே.

வாஷிங்டன், நியூயார்க், நியூஜெர்சி, கலிபோர்னியா, கொலம்பியா உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜோ பைடன்; அலபாமா, அர்கன்சாஸ், இடாகோ, கென்டக்கி, ஒக்லா உள்ளிட்ட 13 மாநிலங்களில் டிரம்ப், பெரிதாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். மேலும் 10 மாநிலங்களில் ஜோ பைடனும், 7 மாநிலங்களில் டிரம்பும் குறுகிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இவை போக, சில மாநிலங்களில் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. கடைசி ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை, யார் வெற்றி பெறுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பொதுமக்களின் ஆதரவைத் தாண்டி, தேர்தல் குழுமம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதில் இருக்கிறது, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு. இங்குள்ள மொத்த தேர்வாளர்களின் வாக்குகள் 538. பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை. இறுதியாக வந்த தகவலின்படி,264- 214 என்று நிலவரம், ஜோ பைடனுக்கு சாதகமாக இருக்கிறது. இன்னமும் சில இடங்கள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில்தான், டொனால்டு டிரம்ப் அதிரடியாக, ‘வெற்றி அறிவிப்பு’ வெளியிட்டார். தாம் வெற்றி பெற்று விட்டதாகவும், அதற்காக அமெரிக்க மக்களுக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். ‘இனிமேலும் வாக்கு எண்ணிக்கையை தொடரக்கூடாது; மோசடி நடக்கிறது; அமெரிக்காவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தப் பார்க்கிறார்கள்’ என்றெல்லாம் கூறிய டிரம்ப், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டை அணுகப்போவதாகக் கூறினார். அதன்படி 3 மாநிலங்களில் வாக்குப்பதிவை நிறுத்த மனு அளித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 6 பேர் டிரம்பின் குடியரசு கட்சியினர்; 3 பேர் மட்டுமே ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள். அதற்காக, ஒருதலைப்பட்சமாய் நியாயத்துக்குப் புறம்பாக சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பளித்து விடாது. ஆனாலும் டிரம்ப், சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார்.

அதேசமயம், பொறுமையாக இருப்போம்; நாம்தான் வெல்கிறோம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜோ பைடன்.

தேர்தல் நியாயமாக நடக்கவில்லை; மோசடி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற பிம்பத்தை ஏற்படுத்தி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார் டிரம்ப். அவர் இப்படி நடந்துகொள்ளக் காரணம்?

அமெரிக்க அதிபராக ஒருவர், அதிகபட்சமாக இரண்டு முறை (8 ஆண்டுகள்) பதவி வகிக்க முடியும். அப்படி, டிரம்புக்கு முன்னர், ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா, இரண்டு முறை அதிபராக இருந்தார்.

ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.

தேர்தல் முடிவை நாகரீகமாக ஏற்றுக்கொண்டு செயல்பட தயார் என்று டிரம்ப் அறிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்க அரசியல் பொதுவாக அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் எப்போதுமே அதிரடி அரசியல் செய்து வருகிற டிரம்ப், தேர்தல் முடிவிலும் அதே பாணியை கடைப்பிடிக்கிறார்.

அமெரிக்காவின் இன்றைய குழப்பமான சூழ்நிலைக்கு வாக்காளர்கள் மட்டுமே காரணம் அல்ல; ஒரு தனிநபரின் அதிகார ஆசையும் காரணம். என்ன செய்ய?

ஒன்று, சீனாவை போன்று அடக்குமுறை; அல்லது, அமெரிக்காவின் அதிரடி. இவ்விரண்டு அரசியல் போக்குகளைத்தான் இன்றைய உலகில் காண முடிகிறது.

தலைவர்கள், தத்துவங்களை தாண்டி, சாமானியர்களின் களமாக அரசியல் மாறும் நாள் எந்நாளோ?

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »