Press "Enter" to skip to content

இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக இங்கிலாந்தில் 4 வார ஊடரங்கு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

லண்டன்:

உலகளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோயின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 9-வது இடத்தில் உள்ளது. அங்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு ஆளாகினர். சுமார் 48 ஆயிரம் பேர் வைரசுக்கு இரையாகி உள்ளனர். அங்கு கடந்த மார்ச் மாதம் முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறையத்தொடங்கியபோது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது 2-வது அலையாக பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் 492 பேருக்கு கொரோனா புதிதாக தாக்கி உள்ளது. இது மே மாதம் 19-ந் தேதிக்கு பிறகு அதிகபட்ச பாதிப்பு ஆகும். புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்து விட்டது.

2-வது அலையாக பார்க்கப்படுகிற இந்த பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டில் மீண்டும் 4 வார கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளவை மூடப்பட்டுள்ளன.

கல்வி, வேலை போன்ற அத்தியாவசிய காரணங்களையொட்டி மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலையை பொறுத்தமட்டில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத சூழலில் மட்டுமே வெளியே சென்று வரலாம்.

எந்த பொழுதுபோக்கு அமைப்புகளும் அங்கு இயங்கவில்லை. ஓட்டல்கள், உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த ஊரடங்கைப்போல இல்லாமல், இந்த முறை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நர்சரிகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களுடன் வசிக்காதவர்களை வெளியே பூங்கா அல்லது கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று சந்திக்க முடியும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது

ஊரடங்கு பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “இந்த ஊரடங்கு 4 வாரங்கள் நடைமுறையில் இருக்கும். டிசம்பர் 2-ந் தேதி தானாகவே காலாவதியாகி விடும். இதுதான் நம்நாட்டுக்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான பாதை” என கூறினார்.

இந்த 2-வது ஊரடங்கை இங்கிலாந்து நாட்டின் எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

2-வது ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வேலை இழப்புகளை தடுப்பதற்காக 80 சதவீத தொழிலாளர்களின் சம்பளத்தை அரசு தருகிற திட்டத்தை வசந்த காலம் வரையில் (மே மாதம் 31-ந் தேதி வரை) நீட்டிக்க வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர், இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »