Press "Enter" to skip to content

போதை பொருள் வழக்கு – இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை:

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்புடைய வழக்கு விசாரணையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த நடிகைகளின் கைபேசிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்புடைய வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் இரண்டு பணியாளர்கள் மற்றும் சிலர் உள்ளிட்டோர் சுஷாந்துக்கு போதை பொருள் வினியோகம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதுபற்றிய வாட்ஸ்அப் உரையாடல்கள் ரியாவின் தொலைபேசியில் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.  நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் கடந்த மாதம் பிணை பெற்று ரியா விடுதலையானார்.  

இதேபோல், போதை பொருள் வழக்கு ஒன்றில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவி ஷபானா சயீத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு முன் மும்பையில் உள்ள அவர்களது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 10 கிராம் அளவுக்கு மாரிஜுவானா என்ற போதை பொருள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.  

இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவை விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பினர்.  அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோசின் மனைவி ஷபானா சயீத், ரூ.15 ஆயிரம் தனிநபர் பிணை தொகை செலுத்தி பிணை பெற்று கொள்ள மும்பை நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதற்கிடையே, தில் ஹை தும்ஹாரா, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்தி திரைப்பட நடிகர் அர்ஜுன் ராம்பாலின் மும்பை வீட்டில் கடந்த 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் சில மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ராம்பாலின் காதலியான கேப்ரியல்லாவிடம் அதிகாரிகள் நேற்று 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடையாத நிலையில் மீண்டும் ஆஜராக அவருக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »