Press "Enter" to skip to content

ஓய்வூதியம் கேட்டு 99 வயது தியாகியின் விண்ணப்பத்தின் மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும்- அரசுக்கு,உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

99 வயது சுதந்திர போராட்ட தியாகியின் ஓய்வு ஊதியம் கோரும் மனு மீது விரைவாக பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து வருகிற 26-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்தவர் கபூர் (வயது 99). சுதந்திர போராட்ட தியாகியான இவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் கொரில்லா படை வீரராக பணியாற்றி உள்ளார். ஆங்கிலேய அரசு இவரை கைது செய்து ரங்கூன் மத்திய
சிறையில் 1945-ம் ஆண்டு அடைத்தது.

விடுதலையான பின்னர் இவர் வியாசர்பாடியில் வசித்து வருகிறார். வறுமையின் காரணமாக தியாகி ஓய்வூதியம் கேட்டு மத்திய அரசிடம் 1997-ம்
ஆண்டு விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்தும், விசாரணை நடத்தியும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு
உத்தரவிட்டது.

ஆனால், 1997-ம் ஆண்டு முதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவரது விண்ணப்பம் பரிசீலனையிலேயே இருந்தது. இதுகுறித்து
சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் கபூர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், அரசு அதிகாரிகளின் செயலுக்கு கடும்
கண்டனம் தெரிவித்தார்.

“99 வயது முதியவர் தன் மூச்சு அடங்குவதற்கு முன்பாக தான் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ற அங்கீகாரமும், ஓய்வூதியமும் வாங்கி
விடவேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஏராளமான கடித போக்குவரத்து நிகழ்ந்து இருந்தாலும், இவரது விண்ணப்பம் உள்ளிட்ட
ஆவணங்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் இன்று வரை உள்ளது. இறுதி முடிவை இதுவரை அதிகாரிகள் எடுக்கவில்லை என்று
மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிப்பதில் ஏற்பட்ட
காலதாமதத்துக்கு அதிகாரிகள் மீது மட்டும் குறை கூற முடியாது. மனுதாரர் அளித்த விண்ணப்பத்தில், பிறந்த தேதியிலும், ரங்கூன் சிறையில்
தன்னுடன் அடைக்கப்பட்ட சக கைதிகளின் சான்றுகளிலும் குறைபாடுகள் உள்ளன” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி, வயது சான்றாக மனுதாரர் ஆதார் அட்டையை சமர்ப்பித்துள்ளார்.
அதை வயது சான்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். சக கைதியான கண்ணன் என்பவர் அளித்த சான்றிதழில் தட்டச்சு குறைபாடு மட்டுமே உள்ளது.

எனவே, இந்த ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, ஓய்வதியம் வழங்குவது குறித்து விரைவாக முடிவு எடுக்க
வேண்டும். முடிவு எடுத்தது குறித்து வருகிற 26-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »