Press "Enter" to skip to content

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது- மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள்

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி தீபாவளி கொண்டாட்டத்தின்போது 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அதாவது
புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அமைதி
பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில்
100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பட்டாசுகள் மற்றும் வெடிகள் வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அளவுக்கு அதிகமாக வெடிச்சத்தம் ஏற்படுத்தும் பட்டாசு
வகைகள், சரவெடிகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் நச்சுப்புகை சுற்றுச்சூழலுக்கும் நமது ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால்
சுவாச நோய்கள் தீவிரமடைதல், கண்கள் மற்றும் உடலின் பிற பாகங்களில் காயம், கேட்கும் திறன் குறைதல், பார்வை குறைபாடு, தூக்கமின்மை,
உயர் ரத்த அழுத்தம், மனநிலை பாதித்தல், செல்லப்பிராணிகள் உள்பட விலங்குகளுக்கு துன்பம் ஏற்படுகிறது.

இதனால் முதியோர், கர்ப்பிணிகள், இதயநோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படும். நம்முடைய
மகிழ்ச்சி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. ஒலி, புகையில்லா தீபாவளியை கொண்டாடுவோம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை
தவிர்ப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »