Press "Enter" to skip to content

மாநிலங்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் – தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு கடிதம்

மாநிலங்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்பதால் அவற்றை பெற தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத்துக்கு வந்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் புனே இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிற கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், ஐதராபாத் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் வழங்கியது.

அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்குள் தடுப்பூசி வினியோகத்தை தொடங்கி விட தயாராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

தடுப்பூசி வினியோகம் தொடங்குவதற்கு முன்பாக இந்தப்பணியை சரியாக திட்டமிட்டு, நிர்வகித்து, திறம்பட செய்து முடிக்க ஏதுவாக இன்று (8-ந் தேதி) உத்தரபிரதேசம், அரியானா தவிர்த்து நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், தடுப்பூசி வழங்குவதை ஏற்றுக்கொள்வதற்கான தயார் நிலையை உறுதிப்படுத்துமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் பிரதீப் ஹால்டர் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகம், ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஷ்கார், டெல்லி, குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்தியபிரதேசம், மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 19 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சம்பந்தப்பட்ட வினியோகஸ்தரால் அடையாளம் காணப்பட்டுள்ள மையத்தில் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்றும், அவற்றை பெறுவதற்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

எஞ்சிய 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அந்தந்த அரசு மருத்துவ அங்காடி கிடங்குகளுக்கு தடுப்பூசி வினியோகிக்கப்படும்.

இதன்படி, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசியின் முதல் தொகுப்பு விரைவில் வழங்கப்பட்டு விடும்.

எனவே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும்பணி விரைவில் தொடங்குகிறது. முதலில் மருத்துவர்கள், நர்சுகள் போன்ற சுகாதார பணியாளர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »