Press "Enter" to skip to content

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கு : நிரவ் மோடியின் தங்கை அப்ரூவர் ஆனார்

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக நிரவ் மோடியின் தங்கை பர்வி மோடி, அவரது கணவர் மய்யங் மேத்தா ஆகியோர் அப்ரூவர் ஆகியுள்ளனர்.

புதுடெல்லி:

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கடன் மோசடி தொடர்பாக நிரவ் மோடியின் தங்கை பர்வி மோடி, அவரது கணவர் மய்யங் மேத்தா ஆகியோர் மீதும் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அவர்கள் இருவரும் தற்போது அப்ரூவர் ஆகியுள்ளனர். இந்த மோசடியில் சிறிய பங்கு மட்டுமே தங்கள் மீது இருப்பதாக சி.பி.ஐ. கூறியுள்ளதாகவும், எனவே தங்களை மன்னிக்குமாறும் மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த அவர்களது அப்ரூவர் மனுக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் இந்த வழக்கில் அப்ரூவர் ஆகியிருக்கும் இருவரும், நிரவ் மோடியின் ரூ.579 கோடி சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு அமலாக்கத்துறைக்கு உதவுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »