Press "Enter" to skip to content

சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா உள்பட 3 பேரும் வருகிற 27-ந்தேதி விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா உள்பட 3 பேரும் வருகிற 27-ந் தேதி விடுதலையாக உள்ளனர்.

பெங்களூரு 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்த கேட்ட கேள்விக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக பதில் கூறியது.

நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தாலும் கூட, அவர் விடுதலை ஆகும் தேதியான வருகிற ஜனவரி 27 என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறை நிர்வாகம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இளவரசியும் தனக்கான அபராதத்தை செலுத்திவிட்டார். ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்துவிட்டு பார்க்கும்போது, சுதாகரனின் தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து சுதாகரனை, அபராதம் செலுத்தியவுடன் விடுதலை செய்யுமாறு பெங்களூரு தனிக்நீதிமன்றம் பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் சுதாகரன் தரப்பினர் இதுவரை ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தவில்லை. இதுகுறித்து அவரது வக்கீலை தொடர்பு கொண்டு கேட்டால், சுதாகரனுக்கான அபராதத்தை விரைவில் செலுத்துவோம் என்று கூறுகிறார். ஆனால் இதுவரை அவரது வக்கீல்கள் பெங்களூரு வரவில்லை. சுதாகரன் தரப்பினர் அபராதம் செலுத்துவதை தாமதித்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு முன்பு சுதாகரன் சிறையை விட்டு வெளியே வர விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் அபராதம் செலுத்துவதை அவரது தரப்பினர் தாமதிப்பதாக கூறப்படுகிறது. இளவரசியும் சசிகலாவுக்கு முன்பு வெளியே வர விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா விடுதலை ஆகும் நாள் நெருங்கிவிட்டது. 

அவர் விடுதலையாக இன்னும் சரியாக 19 நாட்கள் இருக்கிறது. சசிகலா தான் விடுதலை ஆகும் தினத்தை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார். வருகிற 27-ந் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் விடுதலை ஆவார்கள் என்று கூறப்படுகிறது. சிறையில் சசிகலா கன்னடம் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக் கொண்டுள்ளார். கன்னட தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று சான்றிதழை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் சசிகலா மீது ஊழல் தடுப்பு படையில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதாவது சிறையில் சொகுசு வசதிகளை பெற அவர் சிறைத்துறை உயர் அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது இன்னும் விசாரணை கட்டத்தில் தான் உள்ளது. சசிகலா விடுதலையாகி தமிழகம் சென்றாலும், இந்த வழக்கில் விசாரணைக்காக அவர் கர்நாடகத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »