Press "Enter" to skip to content

யாழ்ப்பாணம் பல்கலை.யில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் -துணைவேந்தர் உறுதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

யாழ்ப்பாணம்:

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.

இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு காவல் துறையினர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இன்று இலங்கை வடக்கு-கிழக்கு பகுதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டங்கள் காரணமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கை மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துன், மீண்டும் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்தார்.

அத்துடன், பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக துணைவேந்தர் சற்குணராஜா அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »