Press "Enter" to skip to content

பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை – சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூருவில் சிறையில் இருந்து சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இது தொடர்பாக சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வகமாக அறிவித்து அவரது வக்கீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். 

பெங்களூரு தனிக்நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரம் சசிகலா சார்பில் கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது. சசிகலா அபராத தொகையை செலுத்தி இருந்தாலும், சிறை விதிமுறைகளின்படி அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

மேலும் அவரது விடுமுறையை கழித்து வரும் 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று ஏற்கனவே பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதுபோல, இளவரசி சார்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை இன்னும் கோர்ட்டில் செலுத்தப்படவில்லை. ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தினால், அவரை விடுதலை செய்யலாம் என்று கடந்த மாதமே (டிசம்பர்) பெங்களூரு தனிக்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனால் சிறையில் இருந்து எந்த நேரமும் சுதாகரன் விடுதலை ஆகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தனிக்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும், அபராத தொகை செலுத்தாத காரணத்தால், சுதாகரன் தண்டனை காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த வாரம் சுதாகரன் சார்பில் கோர்ட்டில் அபராத தொகை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் ஏற்கனவே சிறை நிர்வாகம் அறிவித்தபடி வருகிற 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வரும்  27-ம் தேதி விடுதலையாகிறார் என்பதை பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27-ம் தேதி தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுகிறார். அன்றைய தினம் அலுவலக நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட உள்ளார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சசிகலா வரும் 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவது குறித்த தகவலை அவரது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் உறுதி செய்துள்ளார்.

சசிகலா வரும் 27-ம் தேதி காலையில் விடுதலையாக உள்ளதாகவும், இதுபற்றி பெங்களூரு சிறை நிர்வாகம் தனக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாகவும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நேற்று தெரிவித்தார். இதன்மூலம் வரும்  27-ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகி உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »