Press "Enter" to skip to content

கர்நாடக மேல் சபை புதிய தலைவராக பசவராஜ் ஹொரட்டி தேர்வு

காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக மேலவை புதிய தலைவராக பசவராஜ் ஹொரட்டி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பெங்களூரு:

கர்நாடக மேல் சபை தலைவராக பணியாற்றிய பிரதாப்சந்திர ஷெட்டி தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மேல் சபையின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சார்பில் பசவராஜ் ஹொரட்டி, காங்கிரஸ் சார்பில் நசீர்அகமது ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, கர்நாடக மேல் சபை நேற்று காலை கூடியது. சபை கூடியதும், மேல் சபை புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடங்குவதாக துணைத்தலைவர் பிரானேஷ் அறிவித்தார். ஆனால் சபை கூடியதும், பசுவதை தடை சட்ட மசோதா நிறைவேற்றியதை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மேல் சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். துணைத்தலைவர், போய் இருக்கையில் அமருங்கள், மேல் சபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபடி இருந்தனர். மேலும், தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், மேல் சபை தலைவர் பதவிக்கான தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது காவல் துறை மந்திரி பசவராஜ் பொம்மை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி கோடா சீனிவாச பூஜாரி ஆகியோர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதை நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து மேல் சபை துணைத்தலைவர் பிரானேஷ், மேல் சபை தலைவர் பதவிக்கு முன்மொழியும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கே.வி.நாராயணசாமி, ஸ்ரீகண்டேகவுடா ஆகியோர் முன்மொழிந்தனர். அதேபோல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முன்மொழிய வேண்டும் என்று துணைத்தலைவர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் வேட்பாளர் நசீர் அகமது சார்பில் அக்கட்சி உறுப்பினர் நாராயணசாமி, சட்டவிரோதமாக பசுவதை தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை நடவடிக்கைகளுக்கு இது நல்லதல்ல. நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால் மேல் சபை தலைவர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் 2-வது முறையாக பசவராஜ் ஹொரட்டியின் பெயரை முன்மொழிந்தனர். அதேபோல் 2-வது முறையாக காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை முன்மொழியும்படி துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு இருந்ததால், யாரும் முன்மொழியவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால், சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியபடி இருந்தது.

இந்நிலையில், கடும் அமளிக்கு இடையே கர்நாடக மேல் சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி தேர்ந்தெடுக்கப்பட்டதாக துணைத்தலைவர் பிரானேஷ் அறிவித்தார். அதற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த கூச்சல், குழப்பத்திற்கு இடையே மேல் சபை புதிய தலைவர் பசவராஜ் ஹொரட்டியை அவை முன்னவர் கோட்டா சீனிவாச பூஜாரி, மந்திரிகள் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சித் தலைவர்கள் அழைத்து வந்து மேலவை தலைவரின் இருக்கையில் அமர வைத்தனர்.

மேல் சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ் ஹொரட்டிக்கு மந்திரிகள், ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பசவராஜ் ஹொரட்டி மேலவை உறுப்பினர்கள் ஆசிரியர் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தபோது பசவராஜ் ஹொரட்டி அறிவியல், தொழில்நுட்பம், சிறுசேமிப்பு, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக பணியாற்றினார்.

அதேபோல், கடந்த 2006-ம் ஆண்டு குமாரசாமி முதல் மந்திரியாக இருந்தபோது அவரது மந்திரிசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். மேலும் அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேல் சபை தலைவர் தேர்தலை தொடர்ந்து சபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »