Press "Enter" to skip to content

உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துவர முடியுமா? – விஜயபிரபாகரன் கேள்வி

எய்ம்ஸ் செங்கலை எடுத்துக்காட்டும் உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? என்று விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பினார்.

வையம்பட்டி:

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயபிரபாகரன் நேற்று மாலை வையம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

நான் முதன் முதலில் அரசியலை தொடங்கிய இடம் தான் இந்த மணப்பாறை. முதல் சட்டமன்ற தேர்தலில் நான் பிரசாரம் செய்கின்றேன். எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அ.தி.மு.க.விடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். நல்ல கேள்வி தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.

இப்போது அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஏனென்றால் அ.ம.மு.க.வில் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நம் கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும். 

இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக அவர் பேசும்போது, முஸ்லிம்களுக்கும், எங்களுக்கும் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு. சிறுபான்மை மக்களுக்கு விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி என வைக்கப்பட்டது. ஆனால் பாஸ்போட் உள்ளிட்ட தேவைகளுக்காக சண்முகபாண்டியன் என மாற்றினோம். இப்போதும் நான் வீட்டில் இருந்தால் சவுகத் என்று தான் அழைப்பேன் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »