Press "Enter" to skip to content

கொரோனா நிவாரண நிதி வழங்க தடை கேட்டு வழக்கு- அரசு பதில் அளிக்க உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

கொரோனா நிவாரண நிதியை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கத் தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும்விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை வருகிற 15-ந்தேதி முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகையை தமிழக அரசு வழங்க உள்ளது.

இதன்படி, தற்போது தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இந்த வகையில், அரிசி பெறும் அட்டைதாரர்களில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களும் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா காலத்தில் எந்த சம்பள பிடித்தமும் செய்யப்படவில்லை. ஊரடங்கு கட்டுப்பாட்டால் வருமான இழப்பு இல்லை.

அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகைக்கார், ஆட்டோ, சின்ன (மினி) பஸ், ஆம்னி பஸ், தனியார் பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்கள், நடைபாதை வியாபாரிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர்தான் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத்தான் பொருளாதார உதவி தேவை. எனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா தடுப்பூசி, மற்றும் கொரானா சிகிச்சை தவிர்த்து கொரோனா பேரிடர் உதவித்தொகை வழங்கத் தடை விதிக்க வேண்டும்.

வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் மற்றும் அதைவிட கூடுதலாக நிதியுதவி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »