Press "Enter" to skip to content

இஸ்ரேல் – காசா மோதல் : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு

இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் என இடைவிடாமல் சண்டை தொடர்ந்து வருகிறது.

வாஷிங்டன்:

இஸ்ரேல்-காசா மோதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் என இடைவிடாமல் சண்டை தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காசாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன. நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ் தளபதிகள் 2 பேரின் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசா நகரின் மேயா் யாஹ்ய் சர்ராஜ், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் காசாவின் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் நீடித்தால் நிலைமை மிக மோசமாகும்’’ என தெரிவித்தாா்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதல்களால் காசா நகரில் மின் வினியோக தடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், இதனால் அங்கு தினமும் 8 முதல் 12 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஹமாஸ் போராளிகள் நேற்று அதிகாலை இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர். எனினும் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

சில ராக்கெட்டுகள் அஷ்கெலான், ஆஷ்டோட் நகரங்களில் விழுந்து ஓட்டல், கடைகள், சாலைகள், மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் உள்பட 212 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தலைவர்களும், மனிதாபிமான அமைப்புகளும் இருதரப்பு மோதலில் நிகழும் அப்பாவி மக்களின் இறப்பு மற்றும் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிப்பதால் ஏற்படும் குழப்பங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை நடத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது கண்மூடித்தனமான ராக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு ஜனாதிபதி ஜோ பைடன் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

அதோடு அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்ய இஸ்ரேலை அவர் ஊக்குவித்தார்.

ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள மற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

அதே சமயம் ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். சண்டை நிறுத்தத்தை விரைவாக அமல்படுத்துவதற்கு எகிப்து மற்றும் பிற நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றி வருவதை அவர் விவரித்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »