Press "Enter" to skip to content

மே 1 முதல் ஜூன் 15 வரையில் மாநிலங்களுக்கு 6 கோடி தடுப்பூசி வினியோகம் – முன்கூட்டியே திட்டமிட நடவடிக்கை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிரான இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு தீவிரமாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

புதுடெல்லி:

முன்கூட்டியே திட்டமிட்டு, போடுவதற்கு வசதியாக மே 1-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையில் மாநிலங்களுக்கு சுமார் 6 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிரான இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு தீவிரமாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது.

நேற்று காலை வரையில் 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சுகாதார பணியாளர்களில் 96 லட்சத்து 73 ஆயிரத்து 684 பேர் முதல் டோசும், 66 லட்சத்து 59 ஆயிரத்து 125 பேர் 2-வது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர். முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 45 லட்சத்து 69 ஆயிரத்து 669 பேர் முதல் டோசும், 82 லட்சத்து 36 ஆயிரத்து 515 பேர் 2-வது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

18-44 வயது பிரிவினர் 64 லட்சத்து 77 ஆயிரத்து 443 பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

45-59 வயது பிரிவினர் 5 கோடியே 80 லட்சத்து 46 ஆயிரத்து 339 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 93 லட்சத்து 51 ஆயிரத்து 36 பேர் இரண்டாவதுடோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 48 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோசும், 1 கோடியே 79 லட்சத்து 78 ஆயிரத்து 724 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனாவின் 2-வது தொற்று தீவிரமாக பரவி வருவதால் தடுப்பூசி திட்டத்தை முழுவீச்சுடன் முன்கூட்டியே திட்டமிட்டு நேர்த்தியாக செயல்படுத்த வசதியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலங்கள் முன்கூட்டியே திட்டமிட வசதியாக மே 1-ந்தேதி தொடங்கி ஜூன் 15-ந்தேதி வரையில் இலவசமாக சுமார் 6 கோடி (சரியாக 5 கோடியே 86 லட்சம் டோஸ்) தடுப்பூசி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகிக்கப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.

கூடுதலாக 4.87 கோடி தடுப்பூசி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடி கொள்முதலுக்கு தயாராக இருக்கும் என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாநில அரசுகளும், கொரோனா தடுப்பூசி மையங்களும் தங்களது தடுப்பூசி திட்ட அமலாக்க காலண்டரை கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவிட மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்காக ஜூன் மாதம் 15-ந்தேதி வரையில் தினசரி தடுப்பூசி போடும் திட்ட அளவு குறித்து முன்கூட்டியே அதிகாரிகள் திட்டமிடுமாறு மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »