Press "Enter" to skip to content

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பிறகே தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு

நோய் எதிரணுக்கள் (மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்) அல்லது பிளாஸ்மா தானம் பெற்ற கொரோனா நோயாளிகளும் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.

புதுடெல்லி:

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கான கால வரையறை குறித்து அவர்களிடையே குழப்பமான சூழல் நிலவி வந்தது.

எனவே இது தொடர்பாக தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர் குழு மத்திய அரசுக்கு புதிய பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனாவில் இருந்து குணமடைந்த தனிநபர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். அதாவது 3 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதைப்போல நோய் எதிரணுக்கள் (மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்) அல்லது பிளாஸ்மா தானம் பெற்ற கொரோனா நோயாளிகளும் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.

தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களும் குணமடைந்து 3 மாதங்களுக்கு பிறகே 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனாவை தவிர வேறு ஏதாவது தீவிரமான நோயால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோ அல்லது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தோ குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 முதல் 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் விவகாரம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் 14 நாட்களுக்கு பின் ரத்த தானத்தில் ஈடுபடலாம். இதைப்போல தொற்றுக்கு ஆளானவரும் குணமடைந்த 14 நாட்களுக்கு பின் ரத்த தானம் செய்யலாம்.

கொரோனாவால் எழுந்துள்ள சூழல் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »