Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த ஆஸ்பத்திரி

கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள், ஊழியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாந்தெட் :

நாந்தெட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது ரூ.50 ஆயிரம் சிகிச்சை கட்டணமாக முன்பணத்தை குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர். இந்தநிலையில் நோயாளிக்கு உடல் நலம் மோசமடைந்ததால் 20-ந்தேதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஊசி மருந்து செலுத்துவதற்காக ரூ.35 ஆயிரம் செலுத்தும்படி நோயாளியின் மனைவியிடம் தெரிவித்தனர்.

இந்த பணத்தை செலுத்திய பின்னர் 3 நாள் கழித்து 24-ந்தேதி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நோயாளியின் மனைவியிடம் மீண்டும் கட்டணம் செலுத்த கேட்டு உள்ளனர். இதனால் அவர் சம்பவத்தன்று ரூ.40 ஆயிரம் ரொக்கமாகவும், மீதி ரூ.50 ஆயிரம் கணினிமய பரிவர்த்தனை மூலமும் செய்து இருந்தார். இறுதியாக, பணத்தை பெற்று கொண்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நோயாளி உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் அதற்கான சான்றிதழை அளித்தனர்.

இந்த சான்றிதழில் கடந்த 21-ந் தேதி நோயாளி உயிரிழந்ததாக தெரிவித்து இருந்ததால், ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் குட்டு அம்பலமானது. இதனை கண்ட அவரது மனைவி கடும் கொதிப்படைந்தார்.

21-ந் தேதி அன்றே பலியான கணவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக நாடகமாடி பணம் பறித்தது அவருக்கு தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சம்பவம் குறித்து அங்குள்ள கோர்ட்டில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தும்படி சிவாஜிநகர் காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி சிவாஜி நகர் காவல் துறையினர் அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமணா தமிழ் திரைப்படத்தில் வரும் காட்சிகள் போல் மராட்டியத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »