Press "Enter" to skip to content

கொரோனா குணமாகும் என கூறியதால் ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆயுர்வேத மருந்தால் கொரோனா குணமாகும் என்ற அறிவிப்பால் ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லூர்:

ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த போரிகி ஆனந்தயா என்ற ஆயுர்வேத மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து வழங்கி வருகிறார். அந்த மருந்து கொரோனா வராமல் தடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மருந்து இலவசம் என்றும் அறிவிப்பு வெளியிட்டதால் அதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் கார்கள், ஆம்புலன்சுகளால் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான கூட்டத்தால், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவமனைகளில் இருந்த கொரோனா நோயாளிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் உறவினர்களும் அங்கு விரைந்தனர். அதனால் அப்பகுதியில் உள்ள சில மருத்துவமனைகள் வெறிச்சோடின.

கடந்த சில வாரங்களாக இந்த ஆயுர்வேத மருந்து வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியது. 2 நாட்களாக வினியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

முதல்கட்ட ஆய்வு முடிவுகளின்படி அந்த மருந்து தீங்கு விளைவிக்காது என தெரியவந்தது. இதனால் மீண்டும் வினியோகத்தை தொடர அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம், கூட்டத்தை சீர் செய்ய காவல் துறை பாதுகாப்பும் வழங்கியது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் மருந்து வினியோகம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »