Press "Enter" to skip to content

மருத்துவ நிபுணர்கள்-மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை: முழு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு?

முழு ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுமா? அல்லது அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுமா? என்பதை முதல்-அமைச்சர் முடிவு செய்கிறார்.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என்ற செய்தி வரும் நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு சிறிதளவு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறது. மருத்துவ நிபுணர்கள், 

சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர்களிடம் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து சமீபத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்தனர்.

இதுபற்றிய முழு விவரம் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வந்தார். மருத்துவ நிபுணர்கள் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் கலந்து பேசிய பிறகு முக்கிய முடிவு எடுக்கலாம் என திட்டமிட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் கோவை, சேலம் சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். நேற்று மதுரையில் ஆய்வு செய்துவிட்டு இரவு திருச்சியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு நீடிப்பு குறித்து இன்று முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

சென்னை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்தார். அவர்கள் கூறிய கருத்துகளை கவனமாக கேட்டு அறிந்தார்.

இந்த கூட்டத்தில் முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதன் அடிப்படையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில் சட்டசபையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர மாவட்ட ஆட்சியர்கள் முழு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்து இருப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்திலும் முழு ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்ற கருத்தையே பெரும்பாலான சட்டமன்ற கட்சி தலைவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு அரசு உதவ வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து தரப்பு கருத்துகளின் அடிப்படையில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

முழு ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுமா? அல்லது அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுமா? என்பதை முதல்-அமைச்சர் முடிவு செய்கிறார்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நீட்டிப்பு தேதி பற்றி முழு விவரங்கள் இடம்பெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »