Press "Enter" to skip to content

‘இந்திய வகை கொரோனா’ என்ற வார்த்தைகளை நீக்குங்கள் – சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

இந்தியா கொரோனா என குறிப்பிட்டு அது பல்வேறு நாடுகளிடையே பரவி வருவதாக தவறான தகவல்கள் இணையத்தில் பரப்பப்படுகிறது.

புதுடெல்லி:

‘இந்திய வகை கொரோனா’ என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘பி.1.617’ என்ற உருமாறிய கொரோனா வகையை இந்தியாவில் உருவான உருமாறிய கொரோனா என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் ‘இந்தியன் வேரியன்ட்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன.

ஆனால் இந்த வார்த்தைகளை சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை மத்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது.

எனவே இது தொடர்பாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ‘பி.1.617’ கொரோனாவுடன் உலக சுகாதார நிறுவனம், இந்தியாவுடன் தொடர்புபடுத்தவே இல்லை.

*ஆனால் இதை இந்தியா கொரோனா என குறிப்பிட்டு அது பல்வேறு நாடுகளிடையே பரவி வருவதாக தவறான தகவல்கள் இணையத்தில் பரப்பப்படுகிறது.

* இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 12-ந் தேதி பத்திரிகை செய்தி வழியாக தெளிவுபடுத்தி விட்டது.

*எனவே சமூக வலைத்தளங்கள், தங்கள் தளத்தில் இருந்து கொரோனா வைரசின் இந்திய உருமாறிய வைரசை குறிக்கிற பெயரையும், அதன் அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்கி விட வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. 53 கோடி பேர் ‘வாட்ஸ் அப்’பையும், 44.8 கோடி பேர் ‘யூ டியூப்’பையும், 41 கோடி பேர் ‘பேஸ் புக்’கையும், 21 கோடி பேர் ‘இன்ஸ்டாகிராமை’யும், 1.75 கோடி பேர் ‘டுவிட்டரை’யும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »