Press "Enter" to skip to content

வடகொரியாவுக்கான சிறப்பு தூதரை நியமித்தார் ஜோ பைடன்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாஷிங்டன்:

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.‌

இந்த நிலையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வட கொரியா விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜோ பைடன் மற்றும் மூன் ஜே இன் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது வட கொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதரை ஜோ பைடன் நியமித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தூதரக துறையில் நிபுணத்துவம் பெற்ற தூதரான சங் கிம், வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் ‘‘கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி நாம் செல்லும்போது பதற்றங்களை குறைக்கும் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க வடகொரியாவுடன் தூதரக ரீதியில் இணைந்து செயல்பட நான் தயாராக உள்ளேன்’’ என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்கா வட கொரியாவுக்கு சிறப்புத் தூதரை நியமித்ததை வரவேற்பதாக கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘இது தூதரகத்தை ஆராய்வதற்கான அமெரிக்காவின் உறுதியான அர்ப்பணிப்பையும் வடகொரியாவுடனான உரையாடலுக்கான அதன் தயார் நிலையையும் பிரதிபலிக்கிறது. கொரிய தீபகற்ப பிரச்சினைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு உயர்ந்த மனிதர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளதால் எனக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன’’ என கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »