Press "Enter" to skip to content

‘யாஸ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி:

‘யாஸ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவாகும் எனவும் அது குறிப்பிட்டு உள்ளது.

இந்த புயல் நாளை (புதன்கிழமை) நண்பகலில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே மிகவும் அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது மணிக்கு 165 முதல் 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர மாநிலங்கள் குறிப்பாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை மிரட்டி வரும் இந்த புயலை எதிர்கொள்வதற்கு மத்திய-மாநில அரசுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

மேலும் கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு என மத்திய பாதுகாப்பு நிறுவனங்களும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.

இந்த முன்னேற்பாடு பணிகளை பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தீவிர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அதன்படி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகள் மற்றும் அந்தமான் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதில் முக்கியமாக, புயலால் நேரடி பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனடியாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்ட அமித்ஷா, புயலால் வாகன போக்குவரத்து தடைபடக்கூடும் என்பதால் ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்குமாறும் அறிவுறுத்தினார்.

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்குமாறும், ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள், கொரோனா தடுப்பூசி குடோன்களுக்கு மின் இணைப்பு துண்டிக்காமல் இருக்க வசதிகளை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

தற்காலிக ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட சுகாதார மையங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய உள்துறை மந்திரி, தேவைப்பட்டால் அங்குள்ள நோயாளிகளை இடமாற்றம் செய்யுமாறு கூறியதுடன், புயல் மீட்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரம், தொலைத்தொடர்பு, சாலை போக்குவரத்து, பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே ஒடிசாவில் புயலால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கருதப்படும் 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி பாலாசோர், பத்ராக், கேந்திரபாரா, ஜெகத்சிங்பூர், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலுக்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மாநில அரசு, இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாவட்டத்துக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் நியமித்து உள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் புயல் மீட்பு பணிகளுக்காக 52 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர், 60 மாநில பேரிடர் மீட்புக்குழு, 175 தீயணைப்புக்குழு என பெரும்படையே களமிறக்கப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க கொல்கத்தா துறைமுகத்தில் புயலை எதிர்கொள்வதற்கான பணிகளை துறைமுக நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. அதன்படி கப்பல்கள் அனைத்தையும் துறைமுகத்துக்குள்ளே கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், உள்ளே நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களும் சரியான முறையில் கட்டப்பட்டு பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வேயை பொறுத்தவரை, புயல் தாக்கம் ஏற்படும் பகுதிகள் வழியாக இயக்கப்படும் சுமார் 90 தொடர் வண்டிகளை கிழக்கு கடற்கரைதொடர்வண்டித் துறை ரத்து செய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »