Press "Enter" to skip to content

காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் பிளாய்டு முதலாவது நினைவு தின பேரணி

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25-ந் தேதி, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை வெள்ளை இனத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25-ந் தேதி, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை வெள்ளை இனத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி டெரிக் சாவின், கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதில் பிளாய்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த காவல் துறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார். கொலை வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம்தான் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது.

இதற்கிடையே, ஜார்ஜ் பிளாய்டு கொலையின் ஓராண்டு நிறைவையொட்டி, அமெரிக்கா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல், மின்னபோலிஸ் நகரில், அமைதி பேரணி நடைபெற்றது. கொலை வழக்கு விசாரணை நடந்த மின்னபோலிஸ் நீதிமன்றத்திற்கு முன்பு பேரணி தொடங்கியது. பிளாய்டு குடும்பத்தினர் மட்டுமின்றி, காவல் துறை அடக்குமுறையால் பலியான இதர கருப்பினத்தவரின் குடும்பத்தினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிளாய்டு படத்தை கையில் ஏந்தி சென்றனர். ஆளுநர் டிம் வால்ஸ், மின்னபோலிஸ் மேயர் ஜேக்கப் பிரே, செயின்ட் பால் மேயர் மெல்வின் கார்ட்டர் ஆகியோர் பேரணியை பார்வையிட்டனர்.

பேரணியில் பேசியவர்கள், போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் குடும்பங்களுக்கு நீதி வேண்டும் என்றும், காவல் துறை சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பிளாய்டு நினைவாக தொடங்கப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு பவுண்டேசன் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »