Press "Enter" to skip to content

புதுவை எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு

கடந்த 21-ந் தேதியன்று புதுவை 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனை ஆளுநர் தமிழிசை நியமித்தார்.

புதுச்சேரி:

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.

முதல்-அமைச்சராக கடந்த 7-ந் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் பதவி ஏற்கவில்லை. 9-ந் தேதி தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.

சீனியர் எம்.எல்.ஏ.வான லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதே 9-ந் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்- அமைச்சர் ரங்கசாமி சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

பின்னர், சிகிச்சை முடிந்து கடந்த 17-ந் தேதி புதுவை திரும்பினார். தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காமல் நிலுவையில் இருந்ததால் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய முடியவில்லை.

அமைச்சர்கள் பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் என்.ஆர்.காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாதே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காத நிலையே தொடர்ந்தது. இதனிடையே எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பை உடனடியாக நடத்த வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதியன்று புதுவை 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனை ஆளுநர் தமிழிசை நியமித்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் ஆய்வினை மேற்கொண்டார்.

இதனிடையே வீட்டில் ஒருவார காலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

இந்த நிலையில் சட்டப்பேரவை செயலர் முனுசாமி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை நாளை (புதன்கிழமை) தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்கு காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இதையடுத்து காலை 10 முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து 23 நாட்களுக்கு பிறகு புதுவை எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »