Press "Enter" to skip to content

தடுப்பூசி தட்டுப்பாடு 6 வாரங்களுக்குத்தான் – மத்திய அரசு உறுதி

130 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

புதுடெல்லி:

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு 6 வாரங்களுக்குத்தான் இருக்கும் என்று மத்திய அரசு உறுதிபட கூறி உள்ளது.

கொரோனா தொற்றை ஒழிப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்பது உலகளாவிய விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

அதே நேரத்தில் 130 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவதில் தடுப்பூசி தட்டுப்பாடு இடையூறாக உள்ளது.

இந்த நிலையில், கோவிட்-19 பணிக்குழுவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவரும், வல்லுனருமான மருத்துவர் என்.கே.அரோரா ஒரு செய்தி நிறுவனத்துக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான முடிவுகள் அனைத்தும் அறிவியல் ஆதாரங்களைப் பயன்படுத்தித்தான் எடுக்கப்படுகின்றன.

தற்போது தடுப்பூசியை சிறந்த முறையில் அந்த அடிப்படையில்தான் பயன்படுத்துகிறோம். நாங்கள் சிறந்த செயல்திறனைப் பெற முயற்சிக்கிறோம். அதுமட்டுமின்றி, நாடு பல்வேறு வகையிலான கொரோனாவில் இருந்தும், கொரோனாவின் அலைகளில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னோக்கி நடை போடுகிறோம்.

கொரோனா இங்கே சில காலம் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மக்கள் போதுமான அளவில் இதில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

தடுப்பூசி பற்றாக்குறை என்பது அடுத்த 6 வாரங்களுக்கு மட்டும்தான் என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஜூலை மாதம் முதல் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உற்பத்தி மாதம் ஒன்றுக்கு 20 முதல் 25 கோடி டோஸ்கள் அதிகரிக்கும் என்று அறிந்து இருக்கிறோம்.

இது தவிர்த்து, ஜைடஸ் கேடிலா, ஸ்புட்னிக்-வி, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளையும் இனிவரும் மாதங்களில் பெற இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »