Press "Enter" to skip to content

பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்

பூசக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் பழங்குடியின மக்கள் அனுப்பி வருகின்றனர்.

குன்னூர்:

கொரோனா தொற்று பரவலை அடுத்து மக்கள் அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கைகளை கழுவுவதற்கு சோப்பு, கிருமி நாசினிக்கு பதிலாக பூசக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ளது புதுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிருமி நாசினிக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசக்காய்களை சேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காலத்தில் அடிக்கடி கைகழுவுவதற்கு சோப்புக்கு பதிலாக பூசக்காய்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த பூசக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் பழங்குடியின மாணவர்கள் தங்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் வனப்பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், வனங்களில் கிடைக்கும் சோப்புக்காய் என அழைக்கப்படும் பூசக்காயை நசுக்கினால் அதில் உள்ள வேதிப்பொருள் நுரைபோல் வெளிவரும். அது கிருமிகளை அழிக்கக்கூடியது. சோப்பு நிறுவனங்களே இந்த காயை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »