Press "Enter" to skip to content

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்- அதிகாரி தகவல்

வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று கோயம்பேடு மார்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போரூர்: 

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. பகல் 12 மணி வரை கடைகள் செயல்பட வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து சின்ன (மினி) வேன், ஆட்டோ, மூன்று சக்கர மிதிவண்டிகள் உள்ளிட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி பழம் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே அனுப்பப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

தினசரி 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மார்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அதிகாரி கோவிந்தராஜன் கூறியதாவது:- பொது மக்களின் வசதிக்காக தினந்தோறும் தங்கு தடையின்றி நியாயமான விலையில் காய்கறி, பழம் கிடைத்திடும் வகையில் தற்போது வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்து வருகிறோம்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப நாளுக்கு நாள் காய்கறி விநியோகம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு சந்தை வழக்கம் போல செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »