Press "Enter" to skip to content

கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது- எடப்பாடி பழனிசாமி

கொரோனா இறப்புகளை வெளிப்படைத் தன்மையுடன் அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம்:

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் மாவட்டத்தில் தனது தொகுதிக்குட்பட்ட எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அதன்பின் அவர் அங்கு முதன்மை மருத்துவர் சரவணகுமாரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எவ்வளவு உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பயணியர் மாளிகைக்குச் சென்றார். அங்கு எடப்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் 210 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.1,500 மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பி இருக்கின்றன. நான் முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் வசதிதான் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன. சங்ககிரியில் மட்டும் 20 படுக்கை வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3,800 படுக்கைகள்தான் உள்ளன. ஆனால் 11,500 படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உண்மையை மறைத்து தவறான புள்ளி விவரங்களை கொடுத்துகொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 87 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்றைக்கு அதே அளவுதான் பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்னும் அதிகப்படுத்தப்படவில்லை.

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதால் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். .

சேலம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டிக்கொண்டிருக்கிறது. அது சரியல்ல. சரியான புள்ளிவிவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

இன்றைக்கு எல்லா சுடுகாட்டிலும் நீண்ட வரிசையில் உடல்கள் தகனத்துக்கு காத்து இருக்கின்றன. இப்படி குறைத்துக் காட்டும்போது, அவர்கள் அந்த உடல்களை வீட்டுக்கு எடுத்து சென்று சடங்குகளை செய்து பலமணி நேரம் வீட்டில் வைக்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா நோய் பரவல் அதிகளவு ஏற்பட்டுள்ளது. ஆகவே கொரோனா பாதிப்பை குறைக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும். காய்ச்சல் முகாம்களை அதிகளவு நடத்த வேண்டும்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதால் தான் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழகத்தில் புதிதாக கருப்பு பூஞ்சை என்ற நோய் வேகமாக பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையில் இருந்து மக்களை காக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »