Press "Enter" to skip to content

சி.டி.ஸ்கேன் எடுப்போர் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்- ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு

சென்னை சோதனை மையங்களில் ‘சி.டி.ஸ்கேன்’ எடுப்போர் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய கூட்டம் நடந்தது. காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமை தாங்கினார். இதில் மண்டல ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசியதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், சிகிச்சை மையங்கள், பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் வருவோருக்கு கொரோனா தொற்று அல்லது அதன் அறிகுறி இருந்தால் அதன் விபரங்களை தினமும் சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதன்படி, 402 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இருந்து காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் பற்றிய தகவல் அறியப்படுகிறது. தொற்று அறிகுறியுடன் வந்த 659 பேர் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், சி.டி.ஸ்கேன் மையங்களில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாமல் நேரடியாக நெஞ்சக சி.டி. ஸ்கேன் எடுப்பதாக புகார்கள் வருகின்றன.

எனவே சென்னையில் உள்ள 40 சி.டி.ஸ்கேன் மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் நெஞ்சக சி.டி.ஸ்கேன் எடுப்போரின் பெயர், போன் நம்பர் மற்றும் முகவரி ஆகியவற்றை சென்னை மாநகராட்சிக்கு அந்த ஸ்கேன் மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் தினமும் மின்அஞ்சல் மூலம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவரங்களை தெரிவிக்காத பரிசோதனை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இணை ஆணையர் கங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »