Press "Enter" to skip to content

இந்திய ராணுவத்தில் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் தீவிரம் – தளபதி நரவானே தகவல்

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் எந்தவித சிக்கலும் இன்றி சிறப்பாக நடந்து வருகின்றன. அதற்கு தேவையான வளங்கள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி:

இந்திய ராணுவத்தில் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருவதாக ராணுவ தளபதி நரவானே உறுதிபட தெரிவித்தார்.

உலக அளவில் மிகச்சிறந்த ராணுவத்தை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனினும் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக பாதுகாப்பு வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ஓராண்டுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இவ்வாறு அத்துமீறும் சீனாவை எதிர்கொள்ள ராணுவ நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ராணுவ தளபதி நரவானே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ராணுவ நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது அவர் கூறியதாவது:-

ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் எந்தவித சிக்கலும் இன்றி சிறப்பாக நடந்து வருகின்றன. அதற்கு தேவையான வளங்கள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த நிதியாண்டில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 59 ராணுவ ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 15 ஒப்பந்தங்கள் சாதாரண கொள்முதல் திட்டங்களின் கீழ் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள 44 ஒப்பந்தங்கள் 2020-21-ல் அவசரகால கொள்முதலின் கீழ் முடிவுக்கு வந்துள்ளன. இதைத்தவிர பல முக்கியமான கொள்முதல் திட்டங்களும் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட உள்ளன.

இவ்வாறு நரவானே கூறினார்.

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களையும், தளவாடங்களையும் குவிப்பதற்கு இந்த நவீனமயமாக்கல் தேவை சிரமத்தை ஏற்படுத்தியதா? என்ற கேள்விக்கு, ‘நாங்கள் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை’ என்று அவர் பதிலளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘2021-22-ம் நிதியாண்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4.78 லட்சம் கோடியில், ரூ.1.35 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுக்கையில் இது 18.75 சதவீதம் அதிகம் ஆகும்’ என்றும் குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »