Press "Enter" to skip to content

கொரோனா தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்க தனிமைப்படுத்திய இளம் தாய் – மோடி பாராட்டு

தனக்கும், தன் கணவருக்கும் கொரோனா தாக்கியபோது, தங்களது 6 வயது குழந்தையை பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்திய தாய்க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் வசித்து வருபவர்கள், ககன் கவுசிக், பூஜா வர்மா. இந்த இளம் தம்பதியருக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை.

இந்த நிலையில், கணவன், மனைவி என இருவரையும் கொரோனா தாக்கியது. மாதிரிகள் பரிசோதனையில் தொற்று உறுதியானது. அப்போது குழந்தையை கொரோனா தாக்காமல் பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வி, அவர்கள் மத்தியில் எழுந்தது.

அப்போது பூஜா வர்மாவும், அவரது கணவர் ககன் கவுசிக்கும் தாங்கள் வசித்து வருகிற 3 அறைகளை கொண்ட வீட்டில் மூவரும் ஆளுக்கொரு அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.

6 வயது ஆண் குழந்தை தன்னை எப்படி பராமரித்துக்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்தபோதும், இந்த கடினமான முடிவைத்தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் எண்ணினர். அவ்வாறே செய்தனர்.

6 வயது குழந்தைக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தேவை, ஆனால் கொரோனாவால் அதெல்லாம் கிடைக்காமல் போனது.

அதே நேரம், அந்தக்குழந்தையோ, தான் என்ன தவறு செய்ததால் தன்னை தனியறையில் அப்பாவும், அம்மாவும் வைத்து விட்டார்கள் என்று யோசித்துக்கொண்டே இருந்ததாம்.

ஒரு தாயாக, தன் குழந்தையிடம் இருந்து பிரிந்திருக்க வேண்டிய வேதனையான தருணம் ஏற்பட்டிருப்பதை எண்ணி பூஜா வர்மா வேதனைப்பட்டார். தனது வேதனையை அவர் ஒரு கவிதையாய் வடித்து அதை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.

அதைப் பெற்று வாசித்து, அந்தப் பெண்ணின் நிலையை அறிந்து, அவரை உற்சாகப்படுத்தும் வகையில் மோடி அவருக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர்களை நலம் விசாரித்த பிரதமர் மேலும் கூறி இருப்பதாவது:-

கடினமான சூழ்நிலைகளில் கூட நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் கொரோனா நடத்தை நெறிமுறைகளை தைரியத்துடன் கடைப்பிடித்து, இந்த நோயை எதிர்த்துப் போராடியது கண்டு நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

பொறுமையை இழக்கக்கூடாது, துன்ப காலங்களிலும் தைரியமாக இருக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளன.

உங்கள் கவிதையானது, குழந்தையைப் பிரிந்து இருக்கும் ஒரு தாயாக உங்கள் கவலையையும், வேதனையையும் வெளிப்படுத்தியது. உங்கள் தைரியமும், நேர்மறையான சிந்தனையும் தொடர்ந்து முன்னோக்கி நடைபோடவும், வாழ்வில் எந்தவொரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் துணை நிற்கும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த ககன் கவுசிக், பூஜா தம்பதியர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். அவர்களது குழந்தையை கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொண்டும் விட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »