Press "Enter" to skip to content

ராமர் கோவிலுக்கு கொடுத்த நன்கொடையை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் – பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் அதிரடி

ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ராமர் கோவிலுக்கு எதிராக இருந்தவர்கள்தான் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார்.

லக்னோ:

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தநிலையில், அறக்கட்டளைக்கு ஆதரவாக, உத்தரபிரதேச மாநிலம் உன்னா தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யும், சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு புகழ் பெற்றவருமான சாக்ஷி மகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:-

ராமர் கோவில் அறக்கட்டளை நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அப்படி குற்றம் சாட்டும் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் ஆகியோர் ராமர் கோவில் கட்ட நன்கொடை அளித்திருந்தால், அந்த ரசீதை காட்டி நன்கொடையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை நன்கொடை அளிக்காவிட்டால், அவர்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது?

ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ராமர் கோவிலுக்கு எதிராக இருந்தவர்கள்தான். செங்கல்லை வைக்கவிட மாட்டோம் என்று கூறியவர்கள். ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள். தற்போது, ராமர் கோவில் கட்ட தொடங்கியவுடன் அதற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, நில விவகாரத்தில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் தனக்கு ரூ.2 கோடி தர முன்வந்ததாக அயோத்தி மடாதிபதி சாந்த் பரமன்ஸ்தாஸ் கூறியுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »