Press "Enter" to skip to content

இரு மாநில உறவிற்கு இது உகந்தது அல்ல- எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்பிற்கும் எதிரான மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஒருதலைப்பட்சமாக- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது என்றும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவினைக் குறைத்திடும் என்றும் கூறி தமிழ்நாடு அரசு மிகக் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரிடம் நேரடியாக வழங்கியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தபோது, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியிருக்கிறேன். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.
ஆகவே, தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்பிற்கும் எதிரான மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »