Press "Enter" to skip to content

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா 24-ந் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

புதுடெல்லி,:

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் சோனியாகாந்தி 24-ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

வேளாண் சட்டங்கள், கொரோனா விவகாரம், பொருளாதாரம் உள்படபல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கூட்டத்தை வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூட்டி உள்ளார். காணொலி காட்சி மூலமாக இக்கூட்டம் நடக்கிறது.

இதில், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதற்கான வியூகம் வகுக்கப்படுகிறது. கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு, தடுப்பூசி பணி, கொரோனா பிரச்சினையை மத்திய அரசு கையாளுவது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்படுகிறது.

எந்தெந்த பிரச்சினைகளில் மத்திய அரசின் தோல்வியை முன்வைத்து மக்களிடையே பிரசாரம் செய்யலாம் என்று நிர்வாகிகள் யோசனை தெரிவிப்பார்கள். கூட்டத்தில், நாட்டின் கொரோனா நிலவரம், பொருளாதார சூழ்நிலை ஆகியவை பற்றியும் பேசப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »