Press "Enter" to skip to content

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்

கோவில்கள் முழுமையாக திறக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று காலையிலேயே பெரும்பாலான கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடந்தன.

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு நோய் தொற்று சற்று தணிந்ததால் ஜூன் 7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 தடவை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தளர்வுகள் அறிவிப்பதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மேலும் புதிய தளர்வுகளை அறிவிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

அதன்படி புதிய தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து மே 10-ந்தேதியில் இருந்தே நிறுத்தப்பட்டு இருந்தது.

கடந்த மாதம் 21-ந்தேதி நோய் பாதிப்பு குறைவாக இருந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் டவுன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

28-ந்தேதி முதல் மேலும் 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடர்ந்து நோய் தொற்று கட்டுக்குள் வராததால் அங்கு மட்டும் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது.

இன்று முதல் அந்த மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், குறைவான பகுதிகள் என பிரிக்கப்பட்டு அதற்கு தகுந்த மாதிரி தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இ-பாஸ், இ-பதிவு ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருவிழா, குடமுழுக்கு போன்றவை நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கோவில்கள் முழுமையாக திறக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று காலையிலேயே பெரும்பாலான கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடந்தன. பக்தர்கள் ஏராளமானோர் கோவில்களுக்கு வந்து வழிபட்டு சென்றனர்.

நோய் தாக்கம் தொடரும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஒரு சில தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றன. அங்கு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த போக்குவரத்து வழித்தடங்களை தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

திரைப்படம் திரையரங்கம்கள், நீச்சல் குளங்கள், மதுபார்கள், பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாய அரசியல் கூட்டங்கள், விளையாட்டு, பொழுது போக்கு, கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயிரியல் பூங்காக்கள் திறக்கவும் தடை நீடிக்கிறது.

பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

தற்போது ஒரு சில கட்டுப்பாடுகளை தவிர பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பி இருக்கிறது. அனைத்து இடங்களிலும் பஸ் போக்குவரத்து வழக்கம் போல நடந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »