Press "Enter" to skip to content

தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது போல் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ஜூலை மாதத்துக்கு, தமிழகத்துக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை சி.எஸ்.ஆர். நிதிக்கு கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை ஏழை, எளிய மக்களுக்கு போடுவதற்கு ஏதுவாக பெருநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாக போட திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது போல் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, யாரையும் வற்புறுத்தவில்லை. தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வற்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இதுவரை 18 லட்சத்து 70 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் இதுவரை 13 லட்சத்து 31 ஆயிரத்து 613 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 5 லட்சத்து 38 ஆயிரத்து 907 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் சி.எஸ்.ஆர்.நிதி வரவு குறித்து எந்த ஆஸ்பத்திரியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆன்-லைனின் வெளியிடப்படும்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதேவேளையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த மே மாதம் 4-ந் தேதி செங்கல்பட்டில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக, அன்றைய முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார். வேலூர் ஆஸ்பத்திரியில் 4 உயிரிழப்பு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட 2 பேர் உயிரிழப்புகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்புகள் இல்லை. ஆனால் ஆக்சிஜன் உபகரணங்கள் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் தான்.

கொரோனா பேரிடர் காரணமாக நீட் தேர்வுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவர்கள் மற்றும் நர்சுகளின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்டவை குறித்து போராடும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரிடர் காலம் முடிந்தவுடன் அனைத்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »