Press "Enter" to skip to content

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை

வேட்பாளர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலின்போது வேட்பாளர்கள் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய கூட்ட அரங்கில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டுகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடந்தது.

இதுகுறித்து ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்கள் பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை 100 சதவீதம் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் பார்வையாளர்களும் இதுகுறித்து உரிய வகையில் நடவடிக்கையில் இறங்குவார்கள். வேட்பாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி, கூட்டங்களை அதிகம் சேர்க்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வேட்பாளர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முககவசம், கை உறைகள், பி.பி.இ. கிட்ஸ், வாக்காளர்களுக்கான கையுறைகள் போன்றவற்றை மாநில தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மருத்துவக்கழகத்தின் மூலமாக வாங்கி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரவுன் டேப், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் போன்றவை மாவட்ட அளவில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 100 சதவீதம் நோய் பரவாமல் தடுத்து தேர்தலை ஜனநாயகப்படி, நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவிடபடப்பட்டு உள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால் அதை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பதாக இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய 3 எண்களில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

கூட்டத்தில் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில தோதல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி.நாயர், காவல் துறை உதவி தலைவர் எம்.துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »