Press "Enter" to skip to content

விவசாய மசோதாக்களை எதிர்த்து சிரோமணி அகாலிதள கட்சி இன்று பேரணி

விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆனதை குறிக்கும் வகையில் சிரோமணி அகாலிதள கட்சி இன்று எதிர்ப்பு பேரணி நடத்துகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 மற்றும் விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை ஆரம்ப நிலையில் இருந்தே பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்த்து வந்தது.

அன்றைய தினம் மக்களவையில் பேசிய சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரான சுக்பீர் சிங் பாதல் எம்.பி., இந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகுவார் என அறிவித்தார்.

இதையடுத்து, மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பா.ஜ.க.வில் அங்கம் வகித்த சிரோமணி அகாலிதள கட்சியின் ஒரே உறுப்பினர் இவர் தான். அவர் பதவி விலகிய பிறகு சிரோமணி அகாலிதள கட்சி, மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

இந்நிலையில், விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆனதை குறிக்கும் வகையில், இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்து சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இருந்து பாராளுமன்றம் வரை கட்சியின் மூத்த தலைவர்கள் சுக்பீர் சிங் பாதல் மற்றும் ஹர்சிம்ரத் கவுர் தலைமையில் இந்தப் பேரணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »